வயிற்று பூச்சிகளை வெளியேற்றும் சீமை நாயுருவி

நமக்கு அருகில் எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், புண்களை ஆற்றக் கூடியதும், வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டதுமான சீமை நாயுருவியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். சாலையோரங்களில் காணக்கூடியது சீமை நாயுருவி. இதன் பூக்கள் நீலநிறம் உடையது. சீமை நாயுருவி வலியை போக்க கூடியது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. நோய்கிருமிகளை அழிக்க கூடியது. வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும்.

வயிற்று புண்களை ஆற்றும். மேல்பற்றாக போடும்போது அடிபட்ட காயங்களுக்கு மருந்தாகிறது. பால்வினை நோய்களால் வந்த புண்களை குணப்படுத்துகிறது. சளியை போக்குகிறது. வாயுவை வெளியேற்றுகிறது. சீமை நாயுருவி இலைகளை பயன்படுத்தி வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும், வயிற்று புண்களை ஆற்றும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீமை நாயுருவி இலைகள், தனியா, பனங்கற்கண்டு, பால். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். இதில், ஒருபிடி அளவுக்கு சீமை நாயுருவி இலைகள், சிறிது தனியா, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வயிற்று புண்கள் ஆறும். இந்த தேனீர் குடல் புண்களை ஆற்றும் அற்புதமான மருந்தாகிறது.

சீமை நாயுருவி வேரை பயன்படுத்தி பால்வினை நோய்களால் ஏற்படும் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீமை நாயுருவி வேர், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், சுத்தப்படுத்தி நசுக்கி வைத்திருக்கும் சீமை நாயுருவி வேர் 5 கிராம் அளவுக்கு போடவும். பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர பால்வினை நோய்களால் ஏற்படும் புண்கள் ஆறும். வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். சீமை நாயுருவி இலைகளை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சிராய்ப்பு காயங்கள், அலர்ஜியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீமை நாயுருவி இலை, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் சீமை நாயுருவி இலை பசை, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆறவைத்து வடிகட்டி வைத்து எடுக்கவும். இதை வெட்டுக்காயம், அடிபட்ட காயம், சிராய்ப்பு காயங்கள் மீது பூசிவர காயங்கள் ஆறும். சீமை நாயுருவி உள் மருந்தாகி பால்வினை நோய்க்கு தீர்வு தருகிறது. வயிற்று புண்கள், காயங்களுக்கு மருந்தாக விளங்கும் இதை பயன்படுத்தி நலம் பெறலாம். உடல் எரிச்சல், கை கால் எரிச்சலுக்கான எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். உணவுக்காக பயன்படும் சுரைக்காயில் இருந்து சாறு எடுத்து, எரிச்சல் உள்ள இடத்தில் பூசினால் வெகுவிரைவில் எரிச்சல் மறைந்து குளிர்ச்சி ஏற்படும்.