சர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்!

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க கூடியதும், தோல்நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மலச்சிக்கலை போக்க கூடியதுமான வெந்தயத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.உணவுக்கு பயன்படும் வெந்தயத்தில் இரும்பு சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின்கள், மினரலை கொண்டுள்ள வெந்தயம் சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டுவர சத்துக்குறைபாடு ஈடுசெய்யப்படும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட வெந்தயம், புற்றுநோய் உண்டாக காரணமான நச்சுக்களை வெளியேற்றும். உடலுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதுடன் உணவுக்கு மணத்தை தருகிறது.வெந்தயத்தை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், கறிவேப்பிலை, திப்லி, மஞ்சள்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடி, கறிவேப்பிலை, திப்லி பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.  இது, செரிமானத்தை தூண்டுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள வெந்தயம், நச்சுக்களை வெளியேற்றுகிறது.

வெந்தயத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், தேன்.செய்முறை: ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயத்தை எடுக்கவும். இதை அரைமணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். பின்னர், இதனுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும். குடல் புண்கள் ஆறும்.வெந்தயத்தை பயன்படுத்தி தலையில் உள்ள பொடுகை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், பால், தேங்காய் எண்ணெய். செய்முறை: வெந்தய பொடியுடன் சிறிது பால் சேர்த்து கலக்கவும். இதனுடன், தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடு பண்ணி சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யவும். இதனால், தலையில் உள்ள பொடுகுகள் விலகும். தலைமுடி கொட்டுவது நின்று முடி வளரும். தலை முடிக்கு பலம் தருகிறது.   தோல்நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகள், மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் நலம் பெறலாம்.பாத வெடிப்பை சரிசெய்வது குறித்த எளிய மருத்துவத்தை பார்க்கலாம். பாத வெடிப்பால் வலி, வேதனை ஏற்படும். வெடிப்பில் இருந்து ரத்தம் கூடவெளியேறும். இப்பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை அற்புதமான மருந்தாகி பயன்தருகிறது. சோற்றுக் கற்றாழை சாறை தினமும் ஓரிரு வேளை தடவிவர சில நாட்களில் பாத வெடிப்பு மறையும். கால்கள் நல்ல வழுவழுப்பு தன்மை பெறும். அழகு பெறும்.